கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட குண்டுப் புரளியினால் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. புறக்கோட்டையிலிருந்து
பாணந்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பஸ் வண்டியில் காணப்பட்ட பொதி ஒன்றினையடுத்து வெள்ளவத்தை ஹேலிங்வூட் இடத்திற்கு முன்பாக குறித்த பஸ் நிறுத்தப்பட்டதுடன் அந்த பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் நின்ற மக்களும் சிதறியடித்து ஓடியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் குண்டு இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் குண்டு செயலழிக்க வைக்கும் பிரிவினரும் காலி வீதியூடான போக்குவரத்துக்களை இடை நிறுத்தியதுடன் பஸ்ஸினுள் சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் போது பஸ்ஸுக்குள் காணப்பட்ட பொதியில் குண்டுகள் எதுவும் கண்டு பிடிக்கப்படாமையினால் பஸ் தொடர்ந்தும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து காலி வீதியினூடான போக்குவரத்துக்கள் மீளத் திரும்பின. குண்டு புரளி காரணமாக சுமார் அரை மணி நேரமாக காலி வீதியினூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.