உலகில் மிக அதிக அளவானோர் சட்டவிரோதமாகக் காணாமற்போகும் நாடு இலங்கை. எனினும் நிலைமையின் பாரதூரத் தன்மையை இலங்கை அரசு நிராகரிப்பதும்,
மனித உரிமை விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளருடன் ஒத்துழைக்க மறுப்பதும், அதற்கு இந்த விவகாரத்தில் உள்ள உட்தொடர்பை புலப்படுத்துகின்றன.
ஆசிய சட்டவள நிலையம், கனடாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றுடன் இணைந்து ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடரின் விவாதத்தின்போது இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடரின் பொது விவாதத்தின் போது, கவுன்ஸில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய மோசமான மனித உரிமைகள் நிலைவரம் நிலவும் நாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
அந்த வரிசையில் இலங்கையையும் சேர்த்து, இலங்கை நிலைவரம் குறித்தும் கூட்டத் தொடரில் கவுன்ஸில் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றது என ஜெனிவாச் செய்திகள் தெரிவித்தன.
இலங்கையில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான நிலைவரம் குறித்து நெதர்லாந்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அதன் பிரதிநிதி நியென்கே விஜ்மென்கா, இலங்கையை ஐக்கிய நாடுகளின் சகல அமைப்புகளுடனும் ஒத்துழைக்குமாறும் கோரியுள்ளார்.
மேலும் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக் குழுவை ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் ஐ.நா. அலுவலகம்
அமைப்பது மட்டும் போதாது
சுவிட்ஸர்லாந்தும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை அமைக்கும் முயற்சிகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகளுக்கான சுவிட்ஸர்லாந்தின் வதிவிடப் பிரதிநிதி பிலர்செ கொடெட், எனினும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மோசமான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு அது மாத்திரம் போதுமான நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிலைவரம் குறித்து அயர்லாந்தும் அங்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. யுத்த நிறுத்தம் கைவிடப்பட்டமையும், அதிகரிக்கும் வன்முறைகளும் ஏற்கனவே மோசமாகவுள்ள மனிதாபிமான மனித உரிமை நிலைவரம் மீது மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் எச்சரித்தார்.
மனித உரிமைக் கவுன்ஸிலின் மேற்படி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச சிறுபான்மை உரிமைக் குழுவின் பிரதிநிதி இலங்கையின் நிலைவரம் தொடர்பாக விசேட அறிக்கையாளர்கள் விடுத்த அறிக்கைகளை வரவேற்றுள்ளார். எனினும் இவை மாத்திரம் இலங்கையில் தற்போது இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தப் போதுமானவையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்ப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
இலங்கையில் யுத்த நிறுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் மரணமும், பெருமளவில் கைதுசெய்யப்படுவதும் அதிகரித்துள்ளன. தேர்தல் நீதியான முறையில் நடைபெறவில்லை என்று பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதி, அரசு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், நிலைமையின் பாரதூரத் தன்மையை உணர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து பங்காற்ற வேண்டும், சிறுபான்மை விவகாரம் குறித்த சுயாதீன நிபுணர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் காணாமற் போகும்போது இவ்வாறு காணாமற் போனவர்கள் திரும்பிவராதபோது அவை குறித்து ஒரு விசாரணை கூட இடம்பெறாதபோது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிப்பது அபத்தமானது என்றும் கவுன்ஸிலின் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.