எதிர்வரும் மே 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடுத்த வாரம் அளவில் கூடி ஆராய்ந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என்று தெரியவருகின்றது.
இத் தேர்தலில் பங்குபற்றினாலும், பங்குபற்றாவிட்டாலும், தேர்தலை ஒட்டிய விடயங்களில் மற்றைய சிறுபான்மைத் தரப்பான முஸ்லிம்களை குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அனுசரித்து, அரவணைத்துப் போகவேண்டும் என்ற கருத்து நிலைப்பாடு கூட்டமைப்புக்குள் ஓங்கி வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவதா என்ற விடயத்தில் கூட்டமைப்புக்குள் இரண்டு பக்கக் கருத்துகள் இருக்கின்றன எனத் தெரிகின்றது.
அரசு, தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை இரு வெவ்வேறு மாகாணங்களாகப் பிரித்த பின்னர், நடைபெறும் இத்தேர்தலில் போட்டியிட முயற்சிப்பது அந்தப் பிரிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டமையாகிவிடும் என்றும், அதனால் இத் தேர்தலையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்புக் கருதுகின்றது.ஆனாலும், ஒற்றையாட்சி முறையை அடியோடு எதிர்க்கும் தமிழ்க் கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலிலும் அந்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தேர்தலில் போட்டியிட்டமையோடு, அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் அந்த ஒற்றையாட்சி முறைமைக்கு விசுவாசம் தெரிவிக்கும் வாசகங்களுடனான சத்தியப்பிரமாண முன்மொழிவை நாடாளுமன்றத்தில் மேற்கொண்டே பதவியேற்றனர் என்பதையும் மறு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.அது போலவே, கிழக்கு மாகாணப் பிரிப்பை தமிழ்க் கூட்டமைப்பு எதிர்த்தாலும் அந்த மாகாணத்துக்கு நடைபெறும் தேர்தலில் பங்குபற்றாமல் விடுவதன் மூலம், சமூகவிரோத சக்திகள் அந்தப் பதவிகளைப் பிடித்துத் தவறான அரசியல் அர்த்தத்தை ஏற்படுத்துவதோடு குழப்பங்களையும் செய்வதற்கு இடமளிக்காமல் தடுப்பதற்காக அத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என அத்தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உயர்மட்டப் பிரமுகர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வாரத்தில் கூடி முடிவெடுப்பார்கள் எனத் தெரிகின்றது.
இதேசமயம், இத் தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் மற்றைய சிறுபான்மைத் தரப்பான முஸ்லிம்களை இத் தேர்தல் உட்பட சகல விடயங்களிலும் அரவணைத்து, அனுசரித்துப் போகவேண்டும் என்ற கருத்தியல் நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுத்துவருகின்றது எனவும், இந்தக் கருத்தை கூட்டமைப்பின் எம்.பிக்கள் அண்மையில் வன்னியில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசனுடன் நடத்திய பேச்சுகளின் போதும் பிரஸ்தாபித்தனர் எனவும் அறியவருகிறது.இத்தகைய நல்லுறவுக்குப் புலிகளின் உடன்பாடும் இணக்கமும் இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடைசியாக ஏற்பட்ட எம்.பி. வெற்றிடத்துக்கு இடம்பெயர்ந்த ஒரு முஸ்லிம் ஒருவரை நியமித்தமை இந்தக் கருத்தைப் பிரதிபலித்து வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.முஸ்லிம்கள் பக்கத்தில் குறிப்பாகக் கிழக்கில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், அணிகள் இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அனுசரித்துப் போவதற்கே கூட்டமைப்பு வட்டாரங்களும் வழிகாட்டித் தரப்புகளும் விரும்புகின்றன என்றும் கூறப்படுகின்றது.