அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தவணை முடிவடையவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு இதுவரை
உரியமுறையில் இலவசப் பாடநூல்கள் சென்றடையவில்லையென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் சி.சரவணபவானந்தன் கூறுகையில்;
இவ்வருடம் 11 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அநேக பாடசாலை மாணவர்களுக்கு இப்பாடநூல்கள் வழங்கப்படவில்லையென அறியவருகிறது.
இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். புதிய பாடத்திட்டம் என்பதால் ஏற்கனவேயிருந்த பழைய பாடநூல்களையும் இவர்களினால் பயன்படுத்த முடியாது.
11 ஆம் தர மாணவர்கள் இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். தவணைப் பரீட்சையும் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
இலவசப் பாடநூல்கள் உரியமுறையில் விநியோகமாகவில்லை என்பதற்காக கல்வி வெளியீட்டு முன்னாள் ஆணையாளர் தர்மசேன விலக்கப்பட்டார். எனினும், புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டும் உருப்படியாக எதுவுமே நடைபெறவில்லை.
தனியார் அச்சகங்கள் உரிய காலத்தில் பாடநூல்களை அச்சடித்து தரவில்லை. அதனால் தான் பாடநூல் விநியோகத்தில் தாமதமென கல்வியமைச்சு கூறிக்கொண்டிருக்க முடியாது.
மாணவர்கள் கல்வி பெறவுள்ள உரிமை பாடநூல் விநியோகச் சீர்கேட்டினால் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே, யுத்தம் மற்றும் இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பிரதேச மாணவர்களுக்கு உரிய முறையில் பாடநூல் விநியோகிக்கப்படாமையானது எவ்விதத்திலும் ஏற்கக்கூடியதல்ல.
எனவே, கல்வியமைச்சு சகல மாணவர்களுக்கும் இலவசப் பாடநூல் சென்றடைய உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.