சிறிலங்காவின் அரச தொலைக்காட்சி ஊடகமான ரூபவாகினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இன்று காலை முதல் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள படையினர், ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கியிருக்கின்றது.
ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த இலங்கை கூட்டுத் தொழிற்சங்கங்கள் இன்றைய நாள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்குள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்ததுடன் பணியாளர்களையும் உள்ளே செல்லவிடாது தடுத்தனர்.
எனினும் தமக்கு ஆதரவான பணியாளர்கள் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அலுவகத்திற்குள் கொண்டு சென்ற படையினர், அவர்களை வைத்து ஒளிபரப்பை தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமுற்ற ஏனைய பணியாளர்களும், ரூபவாகினி கூட்டுத்தாபன தொழிற்சங்க உறுப்பினர்களும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி, ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைவதற்கு திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் இன்று முற்பகல் 10:00 மணியளவில் சுதந்திர சதுக்கம் அமைந்திருந்த இடத்தில் குழுமினர்.
இதனையடுத்து படையினருக்கு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சு பிறப்பித்தது. அத்துடன் ரூபவாகினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் கண்ணீர்ப் புகைக்குண்டு வாகனங்கள் உட்பட கலகம் அடக்கும் காவல்துறையினரும் நுழைந்தனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமிய சுதந்திர சதுக்கப் பகுதியிலும் படையினர் குழுமினர். ரூபவாகினி கூட்டுத்தாபன வளாகத்தின் முன்பாகவுள்ள வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டன.
நிலமை விபரீதம் அடைவதனை உணர்ந்த ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள், ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எனினும் படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் முழு விழிப்பு நிலையில் உள்ளதுடன், படையினரின் கட்டுப்பாட்டிலேயே ரூபவாகினி கூட்டுத்தாபனம் உள்ளது. அத்துடன் ரூபவாகினி கூட்டுத்தாபன உயரதிகாரிகளின் உதவியுடன் ஒளிபரப்பினைத் தொடர்ந்து நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, அரச தலைவருடனான சந்திப்பில் ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள் இன்று மாலை கலந்து கொள்ளவுள்ளனர். அதனைக் கருத்திற்கொண்டே பணியாளர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள், இன்று மாலை அரச தலைவருடன் நடைபெறவுள்ள சந்திப்பில் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.