மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியம் மேற்கொண்ட சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான செப வழிபாடும் விசேடபிரார்த்தனையும்
மாபெரும் சமாதன ஊர்வலமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றன. இதில் சகல கிறிஸ்தவ திருச் சபைகளும் கலந்து கொண்டன.
மட்டக்களப்பு புனித மரியன்னை பேராலயத்தில் அருட்திரு மதியாபரணம் அடிகளாரின் முன்னுரையுடன் இவை ஆரம்பமாகின.
அருட்திரு ரெறன்ஸ் துதியும் ஆராதனையும் நடத்தினார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, அங்கிலிக்கன் திருச்சபையின் அருட்திரு சந்திரன் கிறிஸ்வஸ், அமெரிக்கன்மிஷன் திருச்சபையின் ஈ.பி.சொலமன் ஆகியோர் இறைவாக்கினை வழங்கினார்கள்.
பாடல்கள், பஜனைகள் இடம்பெற்றதுடன், சமாதானப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
சமாதானம் செய்வோர் பேறுபெற்றவர்கள் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப சமாதானத்தை ஏற்படுத்தும் கருவிகளாக எம் அனைவரையும் மாற்றுவதற்கு உறுதி கொள்கின்றோம்.
தொடரும் யுத்தம், வன்முறைகளால் சின்னாபின்னப்பட்டு, வாழும் உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு உரிமைகள் இழந்து வருகின்ற எம் மக்களின் உடனடித் தேவை சமாதானமே.
வெறும் அரசியல் நடவடிக்கைகளும் மக்கள் மேல் திணிக்கப்படும் தீர்வுத் திட்டங்களும் அரசியல் இலாபத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி எடுக்கப்படும் சமாதானத் தீர்வுகளும் நிலையான, நிரந்தரமான, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தாதென்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். எல்லாவிதமான வன்முறைகளையும் ஆயுதக் கலாசாரத்தின் வெளிப்பாடுகளையும் அடியோடு வெறுத்தொதுக்கின்றோம்.
மனிதமாண்பினை மதித்தலும் வாழ்வதற்கான உரிமையினை வழங்குதலும் தூர நோக்குடன் எடுக்கப்படும் இதய சுத்தியுடனான சமாதான முன்னெடுப்புகளே இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.
சகோதரத்துவமும் சகிப்புத் தன்மையும் பொறுமையும் விட்டுக்கொடுத்தலும் அன்பும் மன்னிப்பும் போன்ற உயரிய மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமாதான முயற்சிகளுக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட திடமனத்துடன் உறுதிகொள்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனில் அசையாத நம்பிக்கையும் இறைவனுடைய வழி நடத்தலையும் அவருடைய கருணையையும் அவருடைய இறையன்பையும் வேண்டி நிற்கின்றோம்.
இலங்கைத் திருநாட்டுக்கும் இங்கு வாழ்கின்ற எல்லா இன, மத, மொழி வேறுபாடின்றி சகல மக்களுக்கும் இறைவனுடைய பாதுகாப்பும் பராமரிப்பும் அரவணைப்பும் கிடைக்க இடைவிடாது இறைவனை இறைஞ்சுகின்றோம்.
இறுதியாக இங்கு கூடி இருக்கும் எல்லா கிறிஸ்தவர்களும் எங்கள் வேற்றுமைகளை மறந்து பகையுள்ள இடத்தில் அன்பையும் தீங்கு விழையும் இடத்தில் மன்னிப்பையும் சந்தேகம் எழும் இடத்தில் நம்பிக்கையையும் விதைப்பதன் மூலம் சமாதானத்தின் கருவிகளாகவும் தூதர்களாகவும் மாறுவோம் என உறுதிகொள்கின்றோம் என்றும் அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் சமாதானத்தை பிரதிபலிக்கும் பல்வேறு பதாதைகளை ஏந்தி புனித மரியன்னை பேராலயத்தில் இருந்து மட்டு பஜார், கோட்டை முனைப்பாலம், மட்டு.- திருமலை வீதி வழியாக பேரணியாக கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலயத்தை சென்றடைந்தனர்.