தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய அறவழிப் போராட்டத்திலும் சரி ஆயுதப் போராட்டத்திலும் சரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
தம்மை தியாக உணர்வுடன் இணைத்துக் கொண்டு பெருமை சேர்த்த மண் கிழக்காகும் என்பதை வரலாறு ஒரு போதும் மறந்து விடாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர தளவத்துக்கொட சனுறா விருந்தினர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தியின் `அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், செல்வி.க.தங்கேஸ்வரி, எஸ்.பத்மநாதன், சந்திரநேரு சந்திரகாந்தன், ரி.துரைரட்ணசிங்கம், தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் பொதுச் செயலாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலின் முதற் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமிருந்து வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர். வீ.தேவராஜா பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
"தமிழ்த் தேசியத்தையும் அந்த மண்ணையும் அழித்து விட வேண்டுமென்ற நோக்கில் பேரின வாதம் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த நூல் வெளிவருவது எமக்கு துணிச்சலை கொடுத்திருக்கிறது.
சிறையும் வாழ்வும் தமிழர்களுக்கு சொந்தமானது. உரிமைகளின் இலட்சியத்தை அடையும் வரை எந்தவொரு தமிழனும் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டான்.
தென்னிலங்கை சிறைகளில் மட்டுமல்ல 1978 செப்டம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் சுமார் ஒரு வருடகாலம் நானும் எத்தனையோ தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூட தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்குள்ள தமிழ்த் தாய்மார்கள் எம்மைத் தேடி வந்து ஊட்டிய உணவின் இரத்தம் இன்றும் எம்முடலுடன் இருக்கிறது என்பதை நினைவு கூரும் போது கண்ணீர் வருகிறது.
வடக்கில் அரசியல் ரீதியாக சில பிளவுகள் தோன்றினாலும் சுமார் 50 வருடகாலத்திற்கும் மேலாக கிழக்கு மக்கள் தாயகக் கோட்பாட்டில் உறுதியுடன் செயற்பட்டு வந்துள்ளதுடன், அதற்காக அளப்பரிய பல தியாகங்களையும் செய்துள்ளனர்.
கிழக்கை வைத்துத்தான் தந்தை செல்வா எந்தவொரு அரசியல் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் அந்த மக்களின் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையை இது வெளிக்காட்டுகின்றது.
வடக்கின் பலம் தான் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் தந்தை செல்வா கூறியதையும் இன்று எவரும் மறந்து விட முடியாது.
எமது இனத்தை பிளவு படுத்தும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் சிந்தனையை இன்று மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்ற முயற்சிக்கின்றார்.
எமது இரத்தத்தை சிந்தி ஆரம்பித்த போராட்டத்தை இன்று பேரினவாதம் விலைகொடுத்து வாங்கி கிழக்கை இராணுவ மயப்படுத்தியுள்ளது. இது எமது எதிர்கால சந்ததியை அழித்தொழிக்கும் நடவடிக்கையாகும்.
இதில் எம்மை வருத்துகின்ற துயரமான விடயமென்னவெனில், தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய அதே இளைஞர்கள் சிலர் இன்று பேரினவாதத்திற்கு விலைபோய் துணைபோய் எமது மண்ணின் தாயகக்கோட்பாட்டின் அத்திபாரத்தையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரே இலட்சியத்திற்காக தூக்கப்பட்ட அதேஆயுதங்கள் இன்று பேரினவாதத்தின் பொறிக்குள் சிக்குண்டு தனது இனத்தையே அழித்தொழிப்பதற்கு துணைபோய்க் கொண்டிருக்கிறது.
பேரினவாதத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக முதன் முதலில் 1958 ஆடிக்கலவரத்தையடுத்து இராணுவ வாகனமொன்றை தடுத்து நிறுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலிய துணிச்சல் மிக்கவர்கள் கிழக்கின் துறை நீலாவணை கிராமமக்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவு கூரவேண்டும். இல்லையேல் நாம் வரலாற்றை மறந்தவர்களாக இருப்போம்.
அவ்வாறான தியாகம் நிறைந்த கிழக்கு மண்ணில் இன்று நிகழும் துயரம் நிறைந்த சம்பவங்கள் எமக்கு வேதனையளிக்கின்றது.
1959 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு பெரும்பான்மையினக் குடியேற்றம் இன்றும் நடைபெற்று வருகின்றது. அதில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேநிலைமையை மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான சூழ் நிலையையே இன்று சில ஆயுதக்குழுக்கள் மேற்கொண்டுவருகின்றன.
வடக்கில் தமிழர்களுக்கு வீடு வாசல்கள் வளங்கள் இருந்தாலும் எம் அனைவரினதும் இதயம் கிழக்கில் தான் உள்ளது என்பதை விரைவில் நிரூபித்துக்காட்டுகிறோம்.
போரில் எதுவும் நிகழலாம். ஆனால், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தையோ விடுதலைப்புலிகளையோ ஒரு போதும் அழித்து விட முடியாது.
ஜெயானந்தமூர்த்தியின் அழிக்கப்பட்ட தமிழ்க்கிராமங்கள் என்ற வரலாற்று ஆவணம் எதிர்காலத்தில் எமது சமூகம் தொடர்பாகவும் எமது பழமைமிகு கிராமங்கள் தொடர்பாகவும் கவனிக்க வேண்டிய பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிநிற்கிறது என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் நூலாசிரியருமான எஸ்.ஜெயானந்த மூர்த்தியியும் உரையாற்றினார்.