ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபரான பிரான்ஸிஸ் சுதர்சனின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை கொழும்பு பிரதான நீதிவான் ரவீந்திர பிரேமரட்ணவினால் நிராகரிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலை வழக்கு விசாரணை கொழும்பு பிரதம நீதிவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் இரண்டாவது சந்தேக நபரை பிணையில் விடுவிக்காது தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் இரு பெண்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் முதலாம் சந்தேக நபரான ஜொன்சன் கொலின் வெலன் டைன். இரண்டாவது சந்தேக நபரான பிரான்ஸிஸ் சுதர்சன் ஆகியோரை தவிர ஏனைய மூவரும் கடந்த 7ஆம் திகதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது இரு சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். இதன்போது இரண்டாவது சந்தேக நபரின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி பிணை மனுவொன்றை தாக்கல் செய்தார். இரண்டாவது சந்தேக நபர் பல வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிவானிடம் சட்டத்தரணி கோரினார்.
இதனையடுத்து இந்த படுகொலை வழக்கு விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. இதுகுறித்து விசாரணை தொடர்கின்றது என்று கூறிய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இரண்டாவது சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தõர். இதனையடுத்து பிணை மனு கோரிக்கையினை நிராகரித்த நீதிவான் இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.