பெல்மதுளை பிரதான நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை பஸ்ஸிலிருந்து இராணுவத்தினர் கைக்குண்டொன்றை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக காவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பனாகொடையிலிருந்து பெல்மதுளை பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி வரும் தனியார் பஸ்ஸிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணியளவில் குறிப்பிட்ட பஸ்ஸில் பொதி ஒன்று இருப்பதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு பஸ் சாரதி தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.
பின்பு குருவிட்ட இராணுவ முகாமிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் விரைந்து மீட்கப்பட்ட கைக்குண்டினை பெல்மதுளை கங்கந்த மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் செயலிழக்கம் செய்தனர்.மேற்படி குண்டு தொடர்பான செய்தி நகரம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து பொது மக்கள் தமது பிள்ளைகளை தேடி விரைந்ததினால் பதற்றம் அதிகரித்தது. அத்துடன் பல பாடசாலைகளும் நேரத்துடன் மூடப்பட்டன.