இலங்கையில் தமிழ் மக்கள் கடத்தப்படுவது தொடர்பில் பலத்த கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையிலும் இன்னும் தமிழர்கள் கடத்தப்பட்டே வருகின்றனர்
இந்த மாதம் முதல் கொழும்பின் பல பகுதிகளிலும் வெள்ளைவானில் வந்தோரால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர் உட்பட ஆறு பேர் கடத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் முரசுக்கு தெரிவித்தார்.
யாழ் குடாவை சேர்ந்த யோகராசா அருண்ராஜா (21வயது) என்பர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டாஞ்சேனை இலக்கம் 5,சங்கமித்த மாவத்தையில் வைத்து வெள்ளை வானில்வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதேபோன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆவது ஆண்டு மாணவரான தர்மகுலசிங்கம் மயூரன்(22வயது) என்பவர் கடந்த 4ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றில் பயிற்சிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென குடும்பத்தவரினால் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 9ஆம் திகதி மட்டக்குளி கதிரானவத்தை பிரதேசத்தில் வைத்து வெளிநாடு செல்வதற்காக யாழில் இருந்து இப்பகுதியில் தங்கியிருந்த சோதீஸ்வரன் சிவானந்தகுமார் என்பவர் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
253-6854 என்ற இலக்கத்தையுடைய வெள்ளைவானில் வந்த 3பொலிஸ்,3இராணுவ,3சிவில்,ஒரு ஊர்காவல் படை உடையில் வந்த ஆயுததாரிகள் இவரை கடத்திச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தெஹிவளையில் வைத்து வர்த்தகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேஸி சிவாஜி (53வயது) என்ற வர்த்தகரே தெஹிவளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனையில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவரும் இவர் கடத்தப்பட்டவேளையில் இவரது வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த 15பேரை கிருலப்பனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து குமார குலேந்திரன் என்பவா கடத்திச்செல்லப்பட்டதாகவும் பின்னர் இவர் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் முரசுக்கு தெரிவித்தார்.
கொழும்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான கடத்தல் மற்றும் கைது காரணமாக கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மிகுந்த அச்ச சூழ்நிலையில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.