இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் தாக்கப்படுவது மற்றும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தொடர்பாக ஆராய்வதற்காக நடத்தப்படுகின்ற விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரச ஊடகங்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா,லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ரூபவாஹினி ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தல்கள் மற்றும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதை அடுத்து ரூபவாஹினி ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பல்வேறு நோக்கங்களுக்காக சில சக்திகள் ஊடக நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதற்கு இடம்வழங்கக் கூடாது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு அந்த சக்திகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. அரச ஊடக நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது சகலரையும் இணைத்து கொண்டு தங்களது நிறுவனங்களை முன்னேற்றுவதற்காக வேலைசெய்யவேண்டும். அதேபோல சகல பிரஜைகளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.