ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவிற்கும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் மாநாட்டிற்கு முன்னதாக சிறிலங்காவின் நிலமைகளை ஆராய்வதற்கு என்று கடந்த சனிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழு கொழும்பைச் சென்றடைந்தது.
இக்குழுவினர் கொழும்பில் தங்கியிருந்து அரச உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அங்குள்ள நிலவரம் குறித்து பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சிறிலங்கா அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த கலந்துரையாடல்களை இக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகப் பிரதிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களை இக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
இக்கலந்தரையாடல் குறித்து சிறிலங்கா வெளியுறவு அமைச்சகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் வெளியுறவு அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தலைமையிலான அதிகாரிகள் இன்று கலந்துரையாடல்களை நடத்தினர்.
இக்கலந்துரையாடல்களில் சிறிலங்காவின் நிலமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டறிந்தனர் என்றார்.
கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.