கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ், சிங்கள மக்களுடனும் ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளுடனும் இணைந்து இந்நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான சவாலுக்கு நாம் முகம் கொடுத்திருக்கிறோம்.
ஆயுதம் தாங்கிய குழுக்கள், அரச அடாவடித்தனங்களுக்கு மத்தியில் இம்மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இத்தகைய ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயற்பட இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி கொஹாகொட, உடுமுள்ள பிரதேசத்தில் தனது வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியின் மூலம் அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கத்தில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சராக இருந்து அரசுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக நாம் விலக நேரிட்டாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முஸ்லிம் மக்களிடம் மட்டுமின்றி ஏனைய இன மக்களிடமும் ஆதரவு கட்சியாக தொடர்ந்தும் இருக்கிறது.
இதற்கு சிங்கள மக்களும் பேருதவியாக இருக்கிறார்கள். இன்று எனக்கெதிராக பலவித இனவாத சேறுபூசல்கள் நடக்கின்றன. ரூபவாஹினி மற்றும் அரச ஊடகங்களின் ஊடாக எனக்கு இனவாதி எனும் முத்திரை ஒட்ட முயற்சிக்கப்படுகிறது. கிழக்குப் பிரதேசத்தில் முஸ்லிம் தேசம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கும் ஒருவராக என்னைக்காட்ட பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இத்தகைய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இம்மக்களின் அபிமானத்தைப் பெற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எனக்கு பலத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சிங்களவர் ஒருவர் எமது கட்சி சார்பில் வென்றிருக்கிறார்.