மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக அரச ஊடகம் செய்திவெலியிட்டுள்ளது
இதே வேளை, இந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி நிர்வாகம் தொடர்பாக அறிவூட்டும் இரு நாள் வதிவிட செயலமர்வும் இன்று ஆரம்பமாகவிருக்கிறது.
ஊள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
இச்செயலமர்வில் அமைச்சர்களான கரு ஜயசூரிய, ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இச்செயலமர்வின் முடிவில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாவும், உள்ளுராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கென 25 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .