தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கின்றது.
வடக்கு - கிழக்கில் இதுவரை 60,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதுடன் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் அழிவடையும் நிலை தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கிலேயே இத்தகைய வெள்ளப் பாதிப்பு மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
கிழக்கில்...
மட்டக்களப்பில் வெள்ளத்தின் காரணமாக பல குடும்பபங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் 1,000-க்கும் அதிகமான குடும்பங்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களே வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இவர்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆறுகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன.
மூங்கிலாறு, நாதனை ஆறு, கிரான் ஆறு, சந்தனமடு ஆறு அமைந்திருக்கும் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் சில குளங்களும், ஆறுகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளதால் அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில குளங்களின் அணைக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் இதுவரை 23,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரச அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
மண்முனையில் 8,895 குடும்பங்களும்
மண்முனை வடக்கில் 5, 500 குடும்பங்களும்
ஏறாவூரில் 2,524 குடும்பங்களும்
காத்தான்குடியில் 3,385 குடும்பங்களும்
மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 461 குடும்பங்களும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரச அதிபர் செயலகம் தெரிவித்திருக்கின்றது.
வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் 354.8 மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட காலநிலை அவதானிப்பு நிலைய அதிகாரி சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையிலும் வெள்ளத்தின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கட்டு வருகின்றனர். அம்பாறையில் திருக்கோவில், காரைதீவு , கல்முனை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களிலேயே வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கிராமங்களில் உள்ள சிறிய வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதி மக்கள் கோவில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பயிர்ச்செய்கைகள் அனைத்தும் நாசமாகியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பாறையிலும் 20,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அம்பாறையின் சாய்ந்தமருதுப் பகுதியில் மட்டும் வெள்ளத்தால் 6,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையிலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த கல்முனை சாகிரா பாடசாலைக்குள் வெள்ளம் புகுந்திருப்பதால் மக்கள் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் கூறப்படுகின்றது.
இதேவேளை அம்பாறையில் கடும் உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலும் 1,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரையோரப் பகுதி மக்களும் தாழ்ந்த நிலப்பரப்பில் உள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூதூருக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில்...
யாழ்ப்பாணத்தில் தாழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன் கரையோரப் பகுதியை அண்மித்துள்ள உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடல் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடும் மழை காரணமாக மாணவர்களின் வரவும் பாடசாலைகளில் மிகக்குறைவாகவே காணப்படுவதாகத் கூறப்படுகின்றது.
மன்னாரில் 11,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கி அழிந்து நாசமாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
மன்னாரில் நானாட்டான் மற்றும் வங்காலைப் பகுதிகளிலேயே வெள்ளத்தின் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருப்பதாக மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டிமெல் தெரிவித்திருக்கின்றார்.