மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5500 குடும்பங்களைச் சேர்ந்த 20498பேரும் மண்முனை பிரிவில் 4514 குடும்பங்களைச் சேர்ந்த 17013 பேரும் போரதீவுபற்று பிரிவில் 1667 குடும்பங்களைச் சேர்ந்த 5577 பேரும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவில் 8895 குடும்பங்களைச் சேர்ந்த 33655 பேரும் காத்தான்குடி பிரிவில் 3385 குடும்பங்களைச் சேர்ந்த 15468 பேரும் ஓட்டமாவடி பிரிவில் 840 குடும்பங்களைச்சேர்ந்த 3657 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24801 குடும்பங்களைச் சேர்ந்த 95868 பேர் இதில் அடங்குவர். இதேவேளை மண்முனை வடக்கு, மண்முனை போரதீவுப்பற்று, மண்முனை தென்எருவில் பற்று, ஏறாவூர் பற்று ஆகிய பிரிவுகளில் 1836 குடும்பங்களைச் சேர்ந்த 7209 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். மழை தொடர்ந்து பெய்கிறது. நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துள் 60 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக மக்கள் சொல்லமுடியாத அவல வாழ்வு வாழ்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாலும் வீதிகளில் வெள்ளம் பாய்வதாலும் பெரும் அவதியுறுகின்றனர்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து வந்த மக்கள் படும் அவஸ்தை எழுத முடியாத அவஸ்தையாகும். கட்டாந்தரையில் தற்காலிக கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வசிக்கும் அம்மக்கள் சமைக்க முடியாமலும் படுத்துறங்க முடியாமலும் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர். நிற்பதற்கு கூட நலன்புரி நிலையங்களில் இடம் காணப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் சாப்பாட்டுக்கு பெரும்பாடுபடுவதாக தெரியவருகிறது.