எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று அராசாங்கம் பயங்கரவாதிகள் போல செயற்படவில்லை. இது ஜனநாயகமான அரசாங்கமாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வினால் நேற்று கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை. இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய் வதற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற் கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாது என்னால் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு அறிக்கை கைவசம் கிடைத்துள்ளதாக எமது கட்சியின் சார்பில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. அத்துடன் ஊழியர் தாக்கப்பட்டதற்கும் அரசாங்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
ஊடகங்கள் மீது அச்சுறுத்தல் விடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை அது மட்டுமன்றி ஜனநாயகமான எமது அரசாங்கம் பயங்கரவாதிகளைப் போல செயற்படவில்லை.