மே மாதம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று ஜே.வி.பி தீர்மானித்திருக்கிறது. நேற்று முன்தினம் கூடிய ஜே.வி.பியின் அரசியல் விவகாரக்குழு இத்தீர்மானத்தை எடுத்தது என்றும் மூவினத்தவர்களையும் சேர்ந்த வேட்பாளர்களை ஜே.வி.பி. தேர்தல் களத்தில் இறக்கும் என்றும் ஜே.வி.பி. வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
இது தொடர்பாக ஜே.வி.பியின் எம்.பியான அநுரகுமார திஸ்ஸநாயக்க உதயனுக்குத் தெரிவித்த தகவல்கள் வருமாறு:எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதென ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.கிழக்கில் உள்ள மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாம் போட்டியிடுவோம்.சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களை எமது கட்சியின் சார்பில் நாம் தேர்தல் களத்தில் இறக்குவோம்.
இத் தேர்தல் மிகவும் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியம். அதற்கு ஏற்ப அங்குள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து நேர்மையான தேர்தல் ஒன்று நடைபெறுவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் போட்டியிடும் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த அத்தனை வேட்பாளர்களினதும் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்தவேண்டும். கிழக்கில் மூவினங்களுக்குமிடையில் சகோதர உறவைக் கட்டியெழுப்பும் ஒரு தேர்தலாக நாம் இத் தேர்தலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கிழக்கில் பாரிய வெற்றியை ஈட்டி, அங்குள்ள மூவின மக்களிடையே நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்தி, அவர்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவதே எமது நோக்கம். என்றார்.