இலங்கையில் இராணுவ மயமாக்கல் அதிகமாக தற்போது இடம்பெற்றுள்ளது. அதிகரித்த இராணுவ மயமாக்கலானது கட்டுக்கடங்காத நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக சேவை அமைப்பான லக்ஜய மன்றத்தின் தலைவருமான ஜானக பெரேரா தெரிவித்தார். கொழும்பு 7இல் அமைந்துள்ள தொழில்சார் சங்கங்களின் அமைப்பு கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது,
தற்போது அளவிற்கு அதிகமாக இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்றுள்ளது.
அதனை நான் எதிர்க்கின்றேன். அநுருத்த ரத்வத்த, ஜெனரல் தலுவத்தை ஆகியோரின் கால கட்டத்திலும் அதிகளவான இராணுவ மயமாக்கல் இருந்தது. இவ்வாறான அதிகரித்த இராணுவ மயமாக்கலானது நிலைமையை கைமீறி கட்டுப்பாட்டை இழந்து செல்லும் நிலையை தோற்றுவித்துவிடும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இந்த சமூக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
மாறாக இந்த அமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகின்ற அமைப்பல்ல. இந்த அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களாக பிரபல சட்டத்தரணி லலித் கம்லத், மதங்களின் பேரவையைச் சேர்ந்த சேர்லி திசேரா, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தஸநாயக்க, பிரபல வர்த்தகர் கித்சிறி டி சில்வா, கலாநிதி விஜேதுங்க, டிரோன் வீரக்கொடி போன்றோர் அங்கம் வகிக்கின்ற நிலையில் சமூகத்தின் சகல தரப்பினரும் எம்முடன் கைகோர்த்துள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து அவர்களை இந்த சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கான சமூக பொறுப்பு என்ன என்று காண்பிப்பதே தமது நோக்கம். இன்று யுத்தம் என்பது சகல தரப்பினரையும் பாதிக்கும் விடயமாகவுள்ளது. வடக்கு கிழக்கில் சண்டையிடும் முப்படையினர், பொலிஸார் மட்டுமின்றி கொழும்பில் குண்டு வெடிக்கும் போது அதில் மக்களும் அகப்படுகின்றனர்.
சிங்களவர் தமிழர்களாக இருக்கட்டும் அன்றேல் பௌத்தர் கிறிஸ்தவராக இருக்கட்டும் குண்டு வெடித்தால் அனைத்து தரப்பினரும் அதில் பாதிக்கப்படுவர்.தற்போது அளவிற்கு அதிகமான அளவில் இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்றுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவுவதுடன் அவர்களை மீண்டும் சமூகத்தில் உள்வாங்குவதனூடாக சக்திமிக்க தேசத்தை நோக்கி முன்செல்லும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்குடனேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.