சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் டி.ராஜா மற்றும் தி.மு.க.வின் ஆர்.சண்முகசுந்தரம், பாரதீய ஜனதாக் கட்சியின் திருநாவுக்கரசு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மாநிலங்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ராஜா பேசியதாவது:
இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தாக்குதலால் தமிழர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. அனைத்துலக சமூகம் தொடர்ந்து கண்டித்து வந்த போதிலும் இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது.
மேலும் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான கடல் பகுதியில் கண்ணிவெடிகளை சிறிலங்கா இராணுவம் பொருத்தியுள்ளது.
இதனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ் மீனவர்கள் பலியாகின்றனர். சமீப காலங்களில் இப்படிப் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடலில் கண்ணிவெடிகளை வைப்பது குறித்து பல அனைத்துலக கருத்தரங்கில் பேசப்பட்டுள்ளன.
1987-இல் ஹோக் மாநாடு இது குறித்து கூறியுள்ளது. மனிதாபிமான சட்டத்திற்கான அனைத்துலக சமூகம் இதில் தலையிட்டுள்ளது.
பல அனைத்துலக விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அனைத்துலக நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் அதற்கு எதிராக இத்தகைய கண்ணிவெடிகளை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியுள்ளது.
இச்சூழலில் சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சிகளைத் தருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழர்களைக் கொல்லும் சிறிலங்கா இராணுவத்துக்கு அளிக்கும் பயிற்சிகளை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.
எந்த வகையிலும் சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா உதவக்கூடாது.
இலங்கையில் போர் அத்துமீறும் சூழலில் தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் இந்திய அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது கவலை அளிக்கிறது. அது கண்டிக்கத்தக்கது.
இந்தியா இப்படி மெளனம் சாதிப்பது ஏன்?
ஆகையால் சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா அளித்து வரும் பயிற்சி மற்றும் இலங்கை தொடர்பான தெளிவான கொள்கையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார் டி.ராஜா.
டி.ராஜா பேசுகையில் சில உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர். ஆனால் தி.மு.க. உறுப்பினரான சண்முகசுந்தரம், டி.ராஜா எழுப்புவது மிகவும் பாரதூரமான விவகாரம். பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல் டி.ராஜாவின் கருத்தை பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசும் ஆதரித்துப் பேசியுள்ளார்.