கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு அருகில் கடந்த சில தினங்களாக நடமாடும் வெள்ளை நாகபாம்பு தொடர்பாக இப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை காணப்படுகிறது.
இந்தப்பாம்பு வந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும் கதிர்காமத்துக்கு பொதுமக்களும் உல்லாசப் பயணிகளும் வருவது குறைந்துள்ளது எனவும் இங்குள்ள சோதிடர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு தற்போது அரும்பொருள் காட்சியகம் அமைக்க இரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தக் கட்டிடம் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மறைக்கும் விதமாகவும் ஆலய கட்டிடத்தை விட உயர்ந்தும் கட்டப்பட்டு வருவதாலும் ஒரு துர்க்குறியாகவே இந்தப் பாம்பு வந்து நடமாடுவதாகவும் சோதிடர்கள் கூறுகின்றனர்.
இஅந்தப் பாம்பை வனவிலங்குப் பிரிவு அதிகாரிகள் பிடித்துக் கொண்டுபோய் நடுக்காட்டுப் பகுதியில் விட்டிருந்தனர்.
ஆனால், அப்பாம்பு மீண்டும் கதிர்காமம் ஆலயப் பகுதிக்கு வந்து அங்குமிங்கும் நடமாடித் திரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தப்பாம்பு எவருக்கும் ஒரு தீங்கையும் விளைவிக்காமல் கோயிலுக்கு அருகில் காணப்படுவதால் இது முருகனின் ஒரு செயற்பாடு எனவும் சோதிடர்கள் கூறுகின்றனர்.
அதனால், இரு மாடிக் கட்டிட வேலைகளை நிறுத்துவது நல்லது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பாம்பை பார்வையிட பெருந்திரளானவர்கள் அடிக்கடி அங்கு வருகின்றனர்.