இலங்கையில் நீதிக்கு புறம்பான கொலைகளும் காணாமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகியுள்ள போதிலும் இலங்கையரசுக்கு மாத்திரம் தாம் வழங்கிய அந்தரங்க அறிக்கையை வெளியிட்டு பகிர்ந்து கொண்டமைக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் இலங்கை அரசும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் அந்தரங்கமான தொடர்புகளை பேணிவருவதும் மனித உரிமை மீறல் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியமையும் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போதல் தொடர்பான தனது அந்தரங்க தகவல்களை தவறாக வழி நடத்தும் நோக்குடன் வெளிப்படுத்தியமை தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்துக்கொள்கின்றது.
மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள 2007ஆண்டுக்கான அறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் 2008 மார்ச் 15ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2007ஆம் ஆண்டின் 2ம் 3ம் மாதங்களில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோத கொலைகள் குறிப்பிட்ட விதத்தில் குறைவடைந்து செல்கின்றது என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக மேற்கொள் காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அவதானிப்புகளின் படி நிலமை திரும்பியிருந்தது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அதில் கூறியிருந்தது.
அத்துடன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இரகசிய அறிக்கைகளை அமெரிக்க தூதரகம் பெற்றுக்கொண்டது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையரசுக்கு மாத்திரம் தாம் வழங்கிய அந்தரங்க அறிக்கையினை இவ்விதம் வெளிப்படுத்தி பகிர்ந்து கொண்டமையையும் தமது அறிக்கை தொடர்பில் தாம் இலங்கை அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தவறான தகவல்களையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
நீதிக்கு புறம்பான கொலைகளும் காணாமல்போதலும் இலங்கையில் இடம்பெறும் பயங்கரமான இடம்பெறக்கூடாத நிகழ்வுகளின் ஒரு பகுதிகளாகிவிட்டன.
இவை நிறுத்தப்படவேண்டுமென சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் ஐக்டி மையூ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுடன் இரகசியமாகவும் நேரடியாகவும் உரையாட முற்படுகின்றார்.
இதன் காரணமாகவே இலங்கையில் இடம்பெறும் காணாமல் போதல் தொடர்பில் கருத்துகள் எதனையும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படுவோரை பாதுகாத்து உதவியளிக்கும் அனைத்துலகத்தின் கட்டளை அதிகாரத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொண்டுள்ளது.
தனிப்பட்டதொரு மனிதாபிமான நிறுவனம் என்ற அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இக்கடமையினை நடுநிலைமை பக்கச்சார்பின்மை என்னும் கொள்கைளை கண்டிப்புடன் கடைப்பிடித்து நிறைவேற்றிவருகின்றது.
இலங்கையில் இலங்கையரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்படும் அனைத்து தரப்பினருடனும் பலவந்தமாக காணாமல் ஆக்குதல் போன்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நடாத்திவருகின்றது.
மீறல்களை நிறுத்தவும் அவை மீண்டும் இடம்பெறாதவாறு தடுக்கவும் வேண்டிய சகல நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டுவருகின்றது.
சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களால் பாதிக்கப்பவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவிசெய்வதற்கான தனக்கு இருக்கும் சிறந்தவழி இதுவென்னும் வகையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையரசுடன் இரகசிய தொடர்புகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுவருகின்றது என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.