கிழக்கு மாகாண சபைக்காக நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று புதன்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பசில் ராஜபக்ஷவின் காரியாலயத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது,. பசில் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று அவரது காரியாலயத்திற்கு சென்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பசில் ராஜபக்ஷவுடன் சுமார் ஒரு மணித்தியாலம் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அந்த அழைப்பு தொடர்பாக தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது எனவும் இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னரே உறுதியாக முடிவெடுக்கமுடியும் என்று ஹக்கீம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைதேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் ஹலி தெரிவித்தார்.