ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.