கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுத் தரப்பில் உள்ள கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அணி (பிள்ளையான் குழு) போட்டியிடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இக்கட்சிகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரில் வெற்றிலைச் சின்னத்தில் ஓரணியாகக் களத்தில் குதிக்கவுள்ளன.ஜனாதிபதியின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகரும், அவரது சகோதரரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷவே இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஓர் அங்கமே எனத் தெரிவித்துள்ள பஸில் ராஜபக்ஷ, இக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. தற்போது சகல அங்கத்துவக் கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது. சகல சமூகங்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டமைப்பு உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்கனவே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டுள்ளது. எமது கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
"இவ்வாறு வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தனியான அடையாளம் பாதிக்கப்படாதா?'' என்ற கேள்விக்கு பஸில் ராஜபக்ஷ தான் அவ்வாறு கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி. ஏற்கனவே வெற்றிலை சின்னத்தின் கீழ் போட்டியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜே.வி.பியின் அடையாளம் அதனால் பாதிக்கப்படவில்லையே என்றும் சுட்டிக்காட்டினார்."கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழரா அல்லது வேறு இனத்தவரா வரவேண்டும் எனக் கருதுகின்றீர்களா?'' என்ற கேள்விக்கு ""மக்களே இதனை தேர்தலில் முடிவு செய்ய வேண்டும்.'' எனத் தெரிவித்துள்ள பஸில் ராஜபக்ஷ, தமது அணியின் முதன்மை வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.