மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும் என்பதற்காக முடக்கிவைக்கப்பட்ட பிள்ளையான் குழுவின் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ) ஆயுதப்பிரிவு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காகவும் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றுஅக்குழு தெரிவித்துள்ளது.
இத்தேர்தல் மிகவும் நேர்மையாக வன்முறைகள் எவையுமின்றி இடம்பெறும் என்றும், இதில் எவரும் பயப்படாமல் தாராளமாகப் போட்டியிடலாம் என்றும் அக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா "சுடர்ஒளி'க்குக் கூறியவை வருமாறு:கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சில கட்சிகள் அச்சப்படுகின்றன. அல்லது வேறு காரணங்களுக்காகப் போட்டியிடாமல் தவிர்த்து கொள்வதற்காக அச்சப்படுவது போல் நடிக்கின்றன.
மட்டு.உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறாத போதிலும் வன்முறைகள் இடம்பெற்றன என்று அக்கட்சிகள் குற்றம் சுமத்தின.அதேபோல்தான், இந்தத் தேர்தலிலும் எம்மீது குற்றச்சாட்டுக்களை இப்போதே சுமத்த அக்கட்சிகள் விழைகின்றன.மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வன்முறைகளற்ற தேர்தலாக நடைபெறவேண்டும் என்பதற்காக நாம் எமது ஆயுதப்பிரிவை முடக்கிவைத்தோம். அந்த முடக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.மாகாண சபைத் தேர்தலும் நீதியாக இடம்பெற வேண்டும் என்பதற்காக எமது ஆயுதப் பிரிவின் முடக்கத்தை நீடிக்க நாம் தீர்மானித்துள்ளோம்.இந்தத் தேர்தலிலும் எந்த வன்முறைகளும் இடம்பெறாது என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம்.இத்தேர்தலில் அனைவரும் அச்சமின்றித் தாராளமாகப் போட்டியிடலாம். இதைவிடுத்து எம்மீது எவரும் அநீதியாகக் குற்றம் சுமத்தக் கூடாது என்றார் அவர்.