கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு மூன்று சிலின்டரில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களை கட்டுநாயக்கா வீதியில் காவலரணில் கடமையில் இருந்த படையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கப் ரக ஊர்தியில் மூன்று அலுமினியத்தினாலான சிலின்டர்களில் இந்த நாணயத்தாள்கள் மறைத்து எடுத்துச்செல்லப்பட்டதாக காவல்துறை பேச்சாளரும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியுமான என்.கே.இளங்ககோண் தெரிவித்தார்.
இந்த சிலின்டரினுல் பெருமளவான டொலர்களும் யூரோக்களும் இருந்ததாவும் இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்கள் எண்ணும் பணி இடம்பெற்றுவருவதாகவும் கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெருமதி இதுவரை கணக்கிடப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் விபிலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை தறித்துவிற்பனை செய்துவந்த குழுவொன்றை மொனராகலையில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளரும் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியுமான என்.கே.இளங்ககோண் தெரிவித்தார்.
இந்த மரக்கடத்தல் நடவடிக்கைகள் நீண்ட நாட்களாக இடம்பெற்றுவந்துள்ளதாகவும் இன்று வியாழக்கிழமை மொனராகலையில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்கள் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.