கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது பிள்ளையான்குழுவுடன் சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில், அக்கூட்டணியில் இணைவதற்கு முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளன.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்திலேயே முஸ்லிம் மற்றும் இடதுசாரி கட்சிகள் தமது தயக்கத்தை நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளன.
பிள்ளையான்குழுக்கெதிராக ஆயுதக் குழு என்ற குற்றச்சாட்டு நிலவுகையில் அரசாங்கத் தரப்புடன் கூட்டுச் சேர்வது பாதகமான விளைவை ஏற்படுத்துமெனவும் இதன்போது கட்சிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆளும்தரப்பு ஆயுதக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றமையானது முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்க வேண்டியேற்படுமென எச்சரித்துள்ளதாக அறியவருகிறது.
இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளும் பிள்ளையான்குழு இணைந்து போட்டியிடுகின்றமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏற்படும் பாதகங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய கூட்டணி குறித்த முதற் கூட்டத்திலேயே இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஆயுதக் குழுக்கள் எவையேனும் கூட்டுச்சேரும் பட்சத்தில் இடதுசாரிக் கட்சிகள், அமைச்சர் டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கட்சிக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.