மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்புப் பொறுப்பு சிறிலங்கா படைத்தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இருந்து சிறிலங்கா அதிரடிப்படையினரை உடனடியாக மீளத்திரும்புமாறு உத்தரவிட்டிருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிரடிப்டைத் தலைமையில் திடீர் மாற்றத்தையும் இன்று மேற்கொண்டுள்ளது.
கிழக்கில் படை நடவடிக்கையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறையின் பாதுகாப்பு அதிரடிப் படையினரிடமே இதுவரை காலமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை முதல் அதிரடிப்படையினரை உடனடியாக விலகுமாறும் அதிரடிப்படையினர் இருந்த இடங்களில் படையினர் நிலைகொள்வர் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பில் வாகரை மற்றும் குடும்பிமலையிலும், அம்பாறையில் திருக்கோயில், பொத்துவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் முகாம் அமைத்திருந்த அதிரடிப்படையினர் நேற்று முதல் விலகத் தொடங்கியுள்ளனர்.
திருக்கோவில் அதிரடிப்படை முகாமிலிருந்து இன்று காலை அதிரடிப்படையினர் விலகினர்.
அதிரடிப்படையினர் விலகிய இடங்களை உடனடியாகவே படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் அமபாறையில் நிலைகொண்டிருந்த அதிரடிப்படையினர் என்ன காரணத்திற்காக விலக்கப்படுகின்றனர் என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு எதனையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே அதிரடிப்படைத் தலைமைப் பதவியிலும் இன்று திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
அதிரடிப்படைத் தலைமைப் பதவியை வகித்த நிமல் லூவ்கே அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவருக்கு மேற்கு பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இத்தகைய பதவி மாற்றங்கள் நிகழும்போது ஏற்கனவே வகித்த பதவியைக் காட்டிலும் உயர்பதவி ஒன்றே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நிமல் லூவ்கேவிற்கு ஏற்கனவே வகித்த பதவியை விட குறைவான பதவி ஒன்றே தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையின் புதிய தளபதியாக கே.எம்.எல்.சரத் சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இந்த திடீர் நடவடிக்கை இராணுவத்தின் பல்வேறு மட்டங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
துணை இராணுவக் குழுவினரின் கோரிக்கையை ஏற்றே பாதுகாப்பு அமைச்சு கிழக்கில் இருந்து அதிரடிப் படையை விலக்குவதாகவும் விலக்கப்படும் அதிரடிப் படையினர் மணலாறு பகுதிக்கு அனுப்பப்படவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.