இலங்கை தொடர்பாக விரைவில் தாங்கள் சில முடிவுகளை எடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவே இதனைத் தெரிவித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்த இக்குழு செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் மூவர் கொண்ட குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கே.துரைரெட்ணசிங்கம், ரி. கனகசபை மற்றும் எஸ்.பத்மநாதன் ஆகியோர் சந்தித்து மிக மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இதன்போது, தமிழ் மக்களுக்கெதிரான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல்கள் குறித்தும் யுத்தத்தின் பெயரால் காலாகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
தற்போதைய அரசு யுத்த முனைப்பால் செயற்படுவதால் அரசியல் தீர்வில் சிறிதளவேனும் அக்கறை செலுத்தவில்லை. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் யோசனை ஒன்றை எட்டியுள்ளதாக அரசு முழு உலகையும் ஏமாற்றப்பார்க்கிறது.
யுத்தத்தின் பேரால் தமிழ் மக்களுக்கெதிராக மிக மோசமான மனித உரிமை மீறல்கள் அனைத்து வழிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும் கூட்டமைப்பினர் இங்கு சுட்டிக்காட்டினர்.
மேலும், ஜனநாயக ரீதியாக கிழக்கில் தேர்தல்கள் நடைபெற்றதாக அரசு முழு உலகிற்கும் கூறினாலும் கடந்த பொதுத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பு எம்.பி.க்களோ கட்சிப் பிரமுகர்களோ அங்கு செல்ல முடியாததொரு மோசமான சூழ்நிலையை அரசே உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய கூட்டமைப் பினர், அடுத்து நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலுக்கும் தாங்கள் அங்கு செல்ல முடியாதவாறு மோசமானதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டிய கூட்டமைப்பினர் அடுத்து நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலுக்கும் தாங்கள் அங்கு செல்ல முடியாதவாறு மோசமானதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இவற்றையெல்லாம் மிகக் கவனமாகக் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக அறிவதற்காகவே தாங்கள் இங்கு வந்ததாகவும் அவை பற்றி பெருமளவில் அறிந்துகொண்டதாகவும் விரைவில் அங்கு திரும்பியதும் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை தொடர்பாக முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.