சிறிலங்கா விமான சேவை நிறுவன நிர்வாகத்தை மாற்றியமைக்கும் நோக்கில் அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவரையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா விமான சேவையின் பிரதான கட்டுப்பாட்டு அதிகாரி பீட்டர் ஹில்லுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அவரது தொழில் வீஸா ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீட்டர் ஹீல் டுபாயிலிருந்து தமது பணிகளை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் சட்ட நிறுவனமொன்றினூடாக சிறிலங்கா அரசாங்கம் எமிரட்ஸ் உடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணான வகையில் நடந்து கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி ஜனாதிபதியின் மகன் பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட வைபவத்தில் கலந்து நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு சிறிலங்கன் எயர் லைன்ஸ் நிறுவனம் இட ஒதுக்கீடு வழங்கப்படாமை காரணமாக இந்த சர்ச்சை ஆரம்பமானது.
எவ்வாறெனினும், பத்து வருடங்களுக்கு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதில்லை என எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 31ம் திகதியுடன் முடிவடைகிறது.