வெளிநாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு
அரசாங்கம் அனுமதி வழங்கமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் மறைமுகமாக சுற்றிவளைத்து தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அதிகாரிகள் பிரமுகர்கள் இதுவரை வன்னிக்குப் பல தடவைகள் விஜயம் செய்தபோதிலும், சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் எவ்வித பயன்தரக்கூடிய, முன்னேற்றமும் இல்லை என்று இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் வன்னிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தமது பிரசாரத்துக்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று வெளிநாட்டு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வார ஆரம்பத்தில் இலங்கை வந்து திரும்பிய ஜரோப்பிய ஒன்றியத்தின் அறுவர் கொண்ட தூதுக்குழு விடுதலைப்புலிகள் சமாதான நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்புவது குறித்து அவர்களுடன் பேசுவதற்கு, நோர்வே அனுசரணையாளர்கள், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போர் வன்னி செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் வசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
வெளிவிகார அமைச்சு அதிகாரி இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகையில் கோரிக்கையைத் தட்டிக்கழிக்கும் வகையில் சப்புக்கொட்டியிருக்கிறார்.
அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள்குழு இப்போதைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.