கிழக்கிலிருந்து விசேட அதிரடிப்படையை வாபஸ் பெறுவது அரசாங்கம் மீண்டுமொருமுறை வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெற வேண்டுமாயின் அங்கு செயற்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
2005 இறுதியில் ஜெனீவாப் பேச்சின் போதும் இதனை அரசு ஏற்றுக்கொண்டது. ஆயினும் இன்றுவரை அரசு அதனை மேற்கொள்ளவில்லை.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஜனநாயக அமைப்புகள் தேர்தலில் பங்குபற்றவுள்ள நிலையில் அரசாங்கம் அக் குழுக்களிடமிருந்து ஆயுதக்களைவை மேற்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுக்க ஏன் பயப்படுகின்றது?
இதற்குக் காரணம் கடந்த முறை போல் வருகின்ற மாகாண சபைத் தேர்தலிலும் வாக்கு மோசடி, கொள்ளையில் ஈடுபடுவதற்கேயாகும். இந்நிலையில் அங்கு செயற்படும் விசேட அதிரடிப்படையினரை வாபஸ் பெறும்படி கோரப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெறுகின்ற வன்முறைகள் , கொலைகள் தொடர்பில் யார் பின்னணியில் உள்ளனர் எனத் தெரிந்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதிலிருந்து அரசுக்கும் ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான தொடர்பினைத் தெரிந்து கொள்ள முடியும் .
அரசாங்கம் கிழக்கில் ஒரு பயங்கரவாதத்தை அழித்துவிட்டு மறு பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளது. தற்போது முன்னர் இருந்த வரதராஜப் பெருமாள் போல் மற்றொரு பெருமாளை உருவாக்குகின்றது.
கிழக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகளுக்கு அங்கு செயற்படும் ஆயுதக் குழுக்களே காரணமான நிலையில், இதனைத் தடுத்து நிறுத்தும் விசேட அதிரடிப் படையினரை அக்கரைப்பற்று, திருக்கோவில், விநாயகபுரம், பக்கிமிட்டி ஆகியவற்றிலிருந்து வாபஸ் பெறுவதற்கு அரசு தயாராகின்றது.
கடந்த 20 வருடங்களாக அங்கு செயற்படும் அதிரடிப்படையினரை தற்போது வாபஸ் பெறுவதற்குக் காரணம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதற்குத் தயாராகுவதற்கேயாகும்.
நாம் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.
எதிர்வரும் 25 ஆம் திகதி எமது முடிவுகளைத் தெரிவிப்போம். கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் தேர்தலில் பங்குபற்றுவதற்கும் அரசாங்கம் ஆயுதக்களைவை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.