கற்பிட்டியில் வைத்து பெப்ரவரி மாதம் காணாமல் போன மீனவரான ஜோசப் அருள் ஆனந்த பெர்னாண்டோவை கண்டு பிடிப்பது குறித்து விசாரணை தொடர்வதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 6 ஆம் திகதி காணாமல் போன பிரஸ்தாப நபர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
கடற்படை அதிகாரிகளுடன் தொடர்புபட்ட மீனவர் காணாமல் போனதையடுத்து, கற்பிட்டிப் பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர்.
இருப்பினும் பிரஸ்தாப நபர் குறித்து தகவல் கிடைக்காததையடுத்து காணாமல் போனவரின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமான முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.
இதனடிப்படையில் ஆணைக்குழு முன் ஆஜரான கற்பிட்டி பொலிஸார் வாக்கு மூலத்தை வழங்கினர்.
விசாரணைகளின் படி கற்பிட்டி கற்படை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என முறைப்பாட்டாளர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, கடந்த மாதம் காணாமல் போன மீனவரான அருள் ஆனந்த பெர்னாண்டோவின் சகோதரர் கிறிஸ்டோபர் பெர்னாண்டோ கற்பிட்டி பொலிஸில் மீண்டுமொரு முறைப்பாட்டையும் செய்துள்ளார்.
தனது சகோதரரை விடுவிக்க 2 இலட்சம் ரூபா பணம் கப்பமாகக் கோரப்பட்டுள்ளதாகவும் அதில் 1 இலட்சத்து 42 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும் பணம் பெற்றவரின் வங்கிக் கணக்கு விபரங்கள், அவர் தொலைபேசியில் பேசிய போது ஒலிப்பதிவு செய்தமை குறித்தும் அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பணம் பெற்ற நபர் குறித்து கடற்படை தலைமையகத்துக்கு கற்பிட்டி பொலிஸார் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.