பிள்ளையான் குழுவின் கோரிக்கைக்கு ஏற்பவே கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படைவீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மோசடிகளை கருத்திற்கொண்டு சங்கமன்கந்தை முதல் பொத்துவில் வரையிலான அதிரடிப்படை முகாம்களை மூடவேண்டும் என பிள்ளையான் குழு கோரியுள்ளது. இல்லையெனில் மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என அந்த குழு குறிப்பிட்டுள்ளதை அடுத்தே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் இந்தக்கருத்தை அரசாங்கத்தின் பாதுகாப்பு ஊடக மையம் அறிக்கை ஒன்றின் மூலம் மறுத்துள்ளது. பிள்ளையான் குழுவின் கோரிக்கைக்கு இணங்கவே அதிரடிப்படையினர் இடமாற்றப்படுவதாக வெளியான தகவலானது தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு உதவும் செயற்பாடாகும் என அது குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இது குறித்து கருத்துரைத்த ஸ்ரீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா அதிரடிப்படையினர் தமது கடமைகளை கிழக்கில் பெருமளவில் நிறைவுசெய்துள்ள நிலையில் அவர்களின் சேவைக்கருதி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதிரடிப்படையினர் எந்த இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்களின் சேவை எந்த இடங்களுக்கு தேவையை கவனத்தில் எடுத்து பாதுகாப்பு செயலரின் தலைமையில் கூடிய பாதுகாப்பு படைகளின் பிரதானிகளே இந்த முடிவை மேற்கொண்டதாக விக்டர் பெரோh குறிப்பிட்டார். அத்துமன் கொழும்பின் பாதுகாப்பு உச்சப்படுத்தலை கருத்திற்கொண்டே அதிரடிப்படையின் உதவிகாவல்துறை அதிகாரி நிமால் லிவ்ஹே மேல் மாகாண கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பிள்ளையானின் கோரிக்கைக்கு இணங்க இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அந்த செய்தியை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என அரசாங்கம் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.