சிறிலங்கா அரசால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை
எழுந்துள்ளதாக வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் தெரிவிக்கின்றது.
வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 24 கிளைகளை அமைத்து மக்களிற்கான சேவைகளை வழங்கிவருகின்றது. 85 பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்திவரும் கூட்டுறவுச் சங்கம் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கி எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு சேவைகளை வழங்கி வருகின்றது.
தற்பொழுது சிறிலங்கா அரசினால் உணவுப்பொருட்கள் எரிபொருட்கள் என்பன மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே வன்னிப்பிரதேசத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு
மட்டுப்படுத்தப்பட்டளவு பொருட்களை பெற்று மக்களக்கு வழங்கிவரும் வவுனியா வடக்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கம் பங்கீட்டுப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருகின்றது. அத்தோடு முக்கியமான பிரச்சினையாக மண்ணெண்ணை வளங்கல் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த கூட்டுறவுச் சங்கம் மாதாந்தம் விவசாயி ஒருவருக்கு 50 லீற்றர் மண்ணெண்ணை தேவைப்படும் நிலையில் 5 லீற்றர் மண்ணெண்ணையையே வழங்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கின்றது.
மேலும் விவசாயிகள் போதியளவு எரிபொருளைப்பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வடக்கில் பெரும்பாலனவர்கள் விவசாயச் செய்கையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மலைநாட்டுப்பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டிவருகின்றனர். பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தில் ஒருலீற்றர் மண்ணெண்ணையே 84 ரூபா வீதம் பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணெய் வழங்கலால் அதிகளவு பணம்கொடுத்து வெளிக்கடைகளின் எண்ணெயை வாங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.