கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கிலங்கையில் நிலைகொண்டு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விசேட அதிரடிப்படையினரை அங்கிருந்து விலக்கி, வடக்கில் போர்முனைகளை அண்டிய பகுதிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்திருக்கின்றது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய தகவலில் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.வவுனியா, அநுராதபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வீதியோரக் குண்டுத்தாக்குதல்களை நிறுத்துவதற்கு அங்கு இனிமேல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவிருக்கும் விசேட அதிரடிப்படையினர் உதவுவார்கள் என்றும் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாதக் கிளர்ச்சி நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு பொலிஸ்துறையின் ஒரு பிரிவாக விசேட அதிரடிப்படை உருவாக்கப்பட்டு கடந்த இரு தசாப்த காலமாகப் பெரும்பாலும் கிழக்கிலங்கையில் அந்த அமைப்பு செயற்பட்டு வந்தது. கிழக்கில் பல நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வந்துள்ளது.
கிழக்கு இலங்கையை முற்றாகப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்தாயிற்று என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, திடீரென கிழக்கிலிருந்து விசேட அதிரடிப்படை முகாம்களை வடபகுதியை அண்டிய போர்முனைப் பக்கமாக நகர்த்தத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களின்போது வாக்கு மோசடிகளில் ஈடுபட அனுமதிக்காமல், விசேட அதிரடிப்படையினர் பல வாக்குச் சாவடிகளில் முரண்டுபிடித்து மூர்க்கமாக நின்றனர் என்றும் இது குறித்துக் கொதித்தெழுந்துள்ள பிள்ளையான் அணி, அரசுத் தலைமைக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே விசேட அதிரடிப்படையினரை கிழக்கில் இருந்து நகர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றும்
அரசில் பூரண கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்திலிருந்து இரண்டாயிரம் விசேட அதிரடிப்படையினரை விலக்கிக் கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள படைத்தரப்பு அவர்களை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் பணிக்கு அமர்த்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினரை வடக்கில் நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக மேலும் ஒரு தொகை இராணுவத்தினரை விடுவிக்கக் கூடியதாக இருக்கும் என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கிழக்கில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உதய நாணயக்கார, இதன் காரணமாக அப்பகுதிகளில் விசேட அதிரடிப்படையினருக்குப் பதில் சாதாரண பொலிஸாரைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை வந்துள்ளது என்றார்.ஆனால், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அரசுத் தரப்பு தில்லுமுல்லுசெய்து வெற்றிக்கனியை எட்டுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே பிள்ளையான் குழுவின் அழுத்தத்துக்குப் பணிந்து இப்படி அதிரடிப்படையினரை கிழக்கில் இருந்து நகர்த்த அரசுத் தலைமை முடிவு செய்துள்ளது என்றும் இம்முடிவால் கிழக்கின் எதிர்காலம் ஆபத்துக்குள் சிக்கப்போகின்றது என்றும்
பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் அரசு மீது குற்றம் சுமத்துகின்றன.தமிழ் இளம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அராஜகங்கள் சில தொடர்பாகப் பிள்ளையான் குழு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசுத் தலைமை இந்த நடவடிக்கைகளை எடுக்கின்றது என வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.