இலங்கை விவகாரத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விடாது உறுதியான தீர்மானமொன்றினை மேற்குலக நாடுகள் எடுக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிலை தொடருவதற்கு மேற்குலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது என்று கனடாவின் தெற்காசிய பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜிம் நிக்கலிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் ஜிம் நிக்கிலை மனோ கணேசன் எம்.பி சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான பிரபா கணேசனும் கலந்துகொண்டார்.
இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து சந்திப்பில் எடுத்து விளக்கிய மனோ கணேசன் எம்.பி, இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்கின்றன.
இதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. எனவே இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு போதியளவு அழுத்தத்தினை கனடா அரசாங்கம் வழங்க வேண்டும்.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் தொடர்பில் கண்டன அறிக்கைகளை மட்டுமே மேற்குலக நாடுகள் விடுத்து வருகின்றன.
எனவே இனியாவது இலங்கை விவகாரம் தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்மானங்களை மேற்குலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். இதுவே இன்றைய அவசியத் தேவையாகும்.
கனடாவிலேயே அதிகளவான இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இலங்கை விவகாரத்திற்கு கனேடிய அரசாங்கம் தலைமை தாங்க வேண்டும்.
இதன் மூலம் இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான அழுத்தத்தினை மேற்குலகம் வழங்க முடியும். இதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது.
எனவே இனியும் தாமதிக்காது இலங்கை விவகாரத்தில் மேற்குலகம் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மனோ கணேசன் எம்.பியின் கருத்துக்களை நன்கு செவிமடுத்த தெற்காசிய விவகாரங்களுக்கான கனடாவின் பணிப்பாளர் ஜிம் நிக்கில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை கனடா மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.