சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட உணவு விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பும், உள்நாட்டு பண நிரம்பலில் காணப்பட்ட தடங்கலுமே எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பணவீக்கம் அதிகரித்துச் செல்வதற்குக் காரணமென இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணவீக்கம் இவ்வாண்டு ஜனவரியில காணப்பட்ட 20.8 வீதத்துடன் ஒப்பிடுமிடத்து பெப்ரவரியில் 21.6 வீதமாக அதிகரித்ததாகவும், எனினும் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளின் தாக்கம் படிப்படியாகக் குறைவதனால் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டளவில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவான அதிகரிப்பானது, மசகு எண்ணெயின் விலை படிப்படியாக உயர்வடைந்தமையினால் மேலும் தீவிரமடைந்து குறிப்பாக 2007 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து பல நாடுகளின் பணவீக்கத்தை அதிகரித்துச் சென்றதாகவும், இலங்கையிலும் புதிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் கடந்த ஜனவரியில் காணப்பட்ட 20.8 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து பெப்ரவரியில் 21.6 சதவீதத்தினை அடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரிப் பணவீக்கமும் ஜனவரியில் 16.4 சதவீதத்திலிருந்து பெப்ரவரியில் 17.0 சதவீதத்திற்கு உயர்வடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் உணவு விலைகளினது தொடர்ச்சியான உயர்வும் அதேபோன்று உள்நாட்டு நிரம்பலில் காணப்பட்ட தடங்கல்களும் பணவீக்கத்தினை எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட உயர்வாக அதிகரிக்கச் செய்வதற்கு காரணமாகின.
எனினும், இத்தகைய அபிவிருத்திகளின் தாக்கம் படிப்படியாக குறைந்து ஆண்டின் இரண்டாம் காலாண்டளவில் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,