மனித உரிமை நிலைவரம் தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கை சரியானதே என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் முன்னேற்றமடைந்திருப்பதாக வெளியிட்டிருந்த அறிக்கை சரியானதே என்று அமைச்சு மீண்டும் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் மீறல்கள் குறைந்து செல்லும் போக்கு காணப்படுகின்றது என்றமையக் கருத்தான நிலைப்பாட்டுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) அறிக்கை முரண்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
ஐ.சி.ஆர்.சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நம்பிக்கையான முறையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கௌரவிக்கும் தேவை கருதி இந்த விடயங்கள் குறித்து பகிரங்க விவாதமாக்க விரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் விளங்கிக் கொள்ளாமலோ அல்லது பிரக்ஞையுடனோ தனது அறிக்கையூடாக இலங்கைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிப்போருக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தமை மிகவும் துரதிர்ஷ்டவசமானதென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.