இலங்கையின் இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காணுமாறு வலியுறுத்தல் விடுக்கும் நோக்கத்துடன் லண்டனில்
நேற்று சனிக்கிழமை இருநாள் கருத்தரங்கொன்று ஆரம்பமாகியுள்ளது.
பிரிட்டனை தளமாகக் கொண்டியங்கும் தன்னார்வ தொண்டர் நிறுவனமான உலக சமாதான ஆதரவுக் குழுவானது (Global Peace support Group) இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
2002 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டு பின்னர் கடந்த வருடம் இலங்கை அரசால் வாபஸ் பெறப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு வலியுறுத்தல்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் நிலையில் இந்தக் கருத்தரங்கானது அதற்கு சாதகமான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இனநெருக்கடி தொடர்பான இந்த இருநாள் கருத்தரங்கானது, இனரீதியான பாரபட்சம் தொடர்பான விவகாரங்களை எவ்வாறு வினைத்திறனுடன் கையாள்வது தொடர்பாக கவனம் செலுத்துவதுடன் அரசியலமைப்பு ரீதியாக இந்த விடயங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இக்கருத்தரங்கில் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, சுவீடன், நெதர்லாந்து, ஜேர்மனி, டென்மார்க், அமெரிக்கா, நோர்வே, பிரிட்டன், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், கவிஞர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்னாபிரிக்க அரசாங்கமும் தனது பிரதிநிதியாக தொடர்பாடல் துறை பிரதி அமைச்சர் ரோய் படையாச்சியை கருத்தரங்கிற்கு அனுப்புகிறது. இது தொடர்பாக பிரதியமைச்சர் படையாச்சி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் மோதலுக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசு எப்போதுமே ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்கி வருவதாக கூறியுள்ளார்.
சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கையின் வேறுபட்ட சமூகங்களின் சகல தலைமைத்துவங்களும் மீண்டும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். வன்செயல்கள் அதிகரித்துச் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நாம் கவலையடைந்திருக்கிறோம்.
மோதல்களுக்கு சமாதான வழியில் தீர்வு காண்பது தொடர்பான எமது அனுபவங்களை இந்தக் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளவுள்ளோம். நிறவெறிக்கொள்கையிலிருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய காலகட்டத்தில் நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக நாம் கற்றறிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விருக்கிறோம். அத்துடன் எமக்கு தென்னாபிரிக்கத் தமிழ் குழுக்கள் அமைப்புகள் மற்றும் தென்னாபிரிக்க மக்களிடமிருந்து இலங்கையானது சமாதான நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்புவதற்கான ஆதரவான பங்களிப்பை வழங்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது என்றும் ரோய் படையாச்சி தெரிவித்தார்.
உள்நாட்டு யுத்தமின்றி நிறவெறியிலிருந்து ஜனநாயகத்திற்கு தென்னாபிரிக்கா திரும்பியதை சர்வதேசம் தொடர்ந்து பாராட்டி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.