இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடமிடுவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடந்தவாரம் மத்திய அரசு மீது குற்றச் சாட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். ஒரு புறத்தில் இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகளை வழங்கி, போருக்கு உதவியபடியே மறுபுறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமற்றதெனத் தெரிவித்துவரும் நிலைப்பாடே தமிழக அரசியல்வாதிகள் இத்தகைய கேள்வியை எழுப்பக் காரணமாகும்.
இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு வார கால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகமான "சௌத்புளொக்'கில் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு உயர்மட்ட பிரமுகர்களைச் சந்தித்த அவர், பல்வேறு இடங்களுக்கும் சென்று பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதுமட்டுமன்றி தனது பயணத்தின் முடிவில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா மேலும் உதவிகளை வழங்க இணங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம், அவரது பயணத்துக்கு இந்தியா கொடுத்த முக்கியத்துவம், அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் எல்லாமே புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
இதன்காரணமாக புலிகள் இயக்கம் இந்தியாவைக் கண்டித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இனப்படுகொலைகளை செய்து வரும் இலங்கை இராணுவத்தின் தளபதிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்தமை, இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைக்கப் போகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக புலிகள் கண்டித்திருந்தனர்.
புலிகள் இயக்கம் இந்தியா மீது பகிரங்கமான கண்டனத்தை நீண்ட காலத்துக்குப் பின்னர் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் வகையில் மென்போக்குடன் செயற்பட்ட புலிகள், இராணுவத் தளபதியின் இந்தியப் பயணம், மற்றும் இந்தியா அளித்துவரும் படைத்துறை உதவிகள் குறித்து விசனமடைந்திருப்பதை இந்த அறிக்கையில் இருந்து உணர முடிகிறது.
இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த இயக்கத்துக்கு எதிராக இலங்கைப் படைகள் மேற்கொள்ளும் படை நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவியளிப்பதென்பது இயல்பான தொன்றாகவே இருக்கும்.
ஆனால், இந்தியா ஒரு புறத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்றும், தாம் இலங்கைப் படைகளுக்கு இராணுவ ரீதியான எந்த உதவிகளையும் செய்யமாட்டோம் என்றும் கூறிக்கொண்டு செய்து வரும் உதவிகள்தான் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. இராணுவ தளபாடங்கள் எவற்றையும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்திருந்த இந்திய அரசு கடற்படைக்கு "சயுர', "சாகர' போன்ற போர்க்கப்பல் களை வழங்கியிருக்கிறது. விமானப்படைக்கு "இந்திரா' ரக ரேடர்களை வழங்கியிருக்கிறது. இராணுவத்துக்கான வாகனங்கள், குண்டுதுளைக்காத அங்கிகள் போன்றவற்றை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி இலங்கைப் படைகளுக்கு கிரமமான முறையில் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக புலனாய்வுத் தகவல்களை வழங்கி புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்துகின்ற காரியத்திற்கு உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, புலிகளின் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பான தகவல்கள் இந்தியா ஊடாகவே இலங்கைக் கடற்படைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு இலங்கைப் படைகளுக்குத் தேவையான போர்த்தளபாடங்களையும், பயிற்சிகள், உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியா, மறுபுறத்தில் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்றும், இலங்கை அரசு அரசியல்தீர்வில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறிவரும் ஆலோசனைகள் விந்தையானவையாகவே தெரிகின்றன.
கடந்தவாரம், இலங்கைப் படைகளுக்கு இந்தியா பயிற்சியளிப்பது, உதவிகளை வழங்குவதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்திருந்தது. இதனையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்று இந்தியா திட்டவட்டமாக நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இங்கேதான் இந்தியாவின் இரட்டைவேடம் வெளித்தெரிகிறது. புலிகளுக்கு எதிரான போருக்கு இன்றைக்கும் உதவிவரும் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கலாம்.
ஆனால், அப்படிச் செய்யாமல் இந்திய அரசு "பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது' தான் தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடமும் விசனத்தை உண்டு பண்ணி யிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பொதுவாக ம.தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமைக்கட்சி, புதிய தமிழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்றவற்றின் சார்பில் வெளிவரும் கண்டனங்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவது வழக்கம். ஆனால், தற்போது இந்திய இடதுசாரிகள் தரப்பில் இருந்தும் இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது முக்கியமான தொன்றாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், இடதுசாரிகள் இந்திய அரசாங்கத்தில் காத்திர மான பங்கை வகித்துக் கொண்டிருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எதையும் காணத் திராணியற்ற சிங்களத் தலைமைகள் இருக்கும் வரையில், இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கின்ற இராணுவ ரீதியான எத்தகைய உதவியுமே தமிழ்மக்களின் படுகொலைக்கே உதவும் என்பதை இந்தியா கருத்திலெடுக்க வேண்டும் என்றே பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். இலங்கைப் படைகளுக்கு உதவுகின்ற விவகாரத்திலும் சரி, இந்திய மீனவர்கள் படுகொலை விவகாரத்திலும் சரி இனிவரும் காலத்தில் இந்தியா எத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பது முக்கியமானது. ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இத்தகைய உணர்ச்சிகரமாக விடயங்களை மன்மோகன்சிங் அரசும் காங்கிரஸ் கட்சியும் எவ்வாறு அணுகப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.