சிறிலங்காவில் பல்வேறுபட்ட ஊடக அடக்குமுறைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அமைச்சர் நேற்றமுன்தினம் சிரச ஊடக நிறுவனத்திற்கு
பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அதன் பின்னர் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சில ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
“இன்று நான் விரல் நீட்டிக் கதைக்கிறேன், ஆனால் நாளையோ எனது கைகள்தான் நீளும்” என்று சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக மேர்வின் சில்வா அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும், சிரச ஊடக நிறுவனத்திற்கு ஒளிந்து கொள்ள இடமொன்றை தேடி வைத்துக் கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிரச ஊடக உயர் அதிகாரிகள் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூல முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்தப் போரட்டங்கள் நடைபெற்ற பின்னரும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த நிலைமையின் கீழ் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் கடுமையான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்தன.
அமைச்சர் மேர்வின் சில்வா பதவி விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க போராட்டnமொன்று முன்னெடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடைய தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
எனினும், தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான அண்மைய சந்திப்பின் போது இந்த பிரச்சினைகள் தொடர்பாக இணக்கப்பாடு காணப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் இடைநடுவில் அமைச்சர் மேர்வின் சில்வா அழைக்கப்பட்டிருந்தார். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அமைச்சர் தாம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சிரச ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து தாம் அதிருப்தியடைந்திருப்பதாக அவர் இந்த சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு நடைபெற்று மூன்று தினங்களின் பின்னர் களனி பிரதேசத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற சிரச ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார்.