தமிழிழ விடுதலைப்புலிகளின் ஆழ்கடல் தாக்குதல் வலிமைகள் ஸ்ரீலங்காப்படையினருக்கு பாரிய ஆபத்தை கொண்டு வரலாம் என சண்டேடைம்ஸ் ஊடக இதழ் தெரிவித்துள்ளது.
அவர்கள் முல்லைத்தீவு கடலில் நடத்திய ஸ்ரீலங்கா கடற்படையினரின் டோரா படகின் மீதான தாக்குதலின் பின்னரே இந்த ஆபத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 கடற்படையினர் பலியானதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர் தமது தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் தமிழிழ விடுதலைப்புலிகள் அறிவி;த்திருந்தார்கள். எனினும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் தேடுதலை நடத்தியவர்களின் தகவல்படி ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மீது தமிழிழ விடுதலைப்புலிகளின் படகு மோதியதாகவோ அல்லது துப்பாக்கி சண்டை இடம்பெற்றமைக்கான தடயங்கள் எவையும் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தெரியவில்லை என குறிப்பிடப்படடுள்ளது.
எனவே கடற்கண்ணி தாக்குதலே இந்த படகின் மீது நடத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழிழ விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதல் இந்த படகின் மீது நடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு படையின் சிவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றும் ஒரு தகவலின்படி குண்டை தமது உடல்மீது கட்டிய தற்கொலை கரும்புலி ஒருவர் நீந்தி வந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் சுமார் 40 ஆயிரம் படைவீரர்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ளும் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கும் இவ்வாறான படகின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் படையினருக்கான விநியோகத்திலும் பாரிய அச்சத்தை உருவாக்கியுள்ளதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.