விஞ்ஞானப்புனைக்கதை எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்கின் மீது சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜெகத் வெள்ளவத்த இது தொடர்பாகக் கருத்துரைக்கும்போது காலஞ்சென்ற கிளார்கின் மீது சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாரும் கிளார்க்கினால் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தாம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைகளை மேற்கொள்ளமுடியாது எனச் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணையாளர் டபில்யு.டி.ரி.விஜேசேன தெரிவித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச காவல்துறையினரைத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்புகொண்டது. இதனையடுத்து ஆர்தர் சி கிளார்க்கிடம் காவல்துறையினர் 1998 ஆம் ஆண்டு இரண்டு மணித்தியாலம் விசாரணையையும் மேற்கொண்டனர். எனினும் அவர் மீது குற்றங்கள் எவையும் சுமத்தப்படவில்லை.
கடந்த புதன்கிழமையன்று தமது 90 வது வயதில் காலமான ஆர்தர் சி கிளார்க் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏற்கனவே பிரித்தானிய செய்தித்தாள்களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரித்திருந்தார். இந்தக்குற்றச்சாட்டுக்கள் இலங்கையில் தமது நற்பெயரைக் களங்கப்படுத்தும் செயல் என அவர் கூறியிருந்தார்.
இதேவேளை பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் இலங்கைக்கு வந்திருந்தபோது ஆர்தர் சி கிளார்க்கிற்கு சேர் பட்டம் தரப்படவிருந்தபோதும் பின்னர் அது இடம்பெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கிடையில் ஆர்தர் சி கிளார்க் காலமானதை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தினாலோ அல்லது இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தாலோ எவ்வித இரங்கல் செய்தியும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இணையத்தளம் ஒன்றில் மாத்திரம் சுருக்கமாகக் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கிளார்க் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவரின் விஞ்ஞான புனைகதைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என பிரித்தானிய செய்தித்தாளான தெ டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இறந்தவர்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்துவது இலங்கையின் கலாசாரத்தில் இல்லை என மாற்றுக்கொள்கைக்கான நிறுவனப் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.