தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவ சோதனைச் சாவடிகளை அமைத்தே தமிழ் மக்களை அடக்கி ஆண்டு வருகின்றன.
தமது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்ததும் சிங்களப் படையினரின் இந்தச் சோதனை சாவடிகள் அதிகரித்துள்ளன. இது தமிழ் மக்களின் மனித நேயத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். இச் சோதனைச் சாவடிகளில் விசாரணை செய்யப்பட்ட பல தமிழ் மக்கள் காணாமல் போய் உள்ளனர்.
இது தமிழ் மக்களுக்குப் பெரும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள அரசாங்கம், சில சோதனைச் சாவடிகளை மூடுவதன் மூலம் தமிழ் மக்கள் வெளியுலகத்தில் இருந்து அன்னியப்படுத்தியும் வருகின்றது. கடந்த 18 மாதங்களாக யாழ். குடாநாட்டில் இந்நிலமை நீடிக்கின்றது.
யாழ். குடாநாட்டின் இந்நிலமை அங்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. யாழ். குடாநாடு வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக யாரும் எழுதுவது கிடையாது. சிங்கள அரசின் கொலைக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். குடாநாட்டில் இருப்பவர்களாலும் பேச முடிவதில்லை.
தமிழ் மக்கள் மீதான முதலாவது தடையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாவது தடையாக வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தடையாக உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளது.
2006 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்ப் பகுதிகளுக்கான சீமெந்து மற்றும் எரிபொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இத்தடைகளால் ஆழிப்பேரலை அனர்த்த உதவிகளை வழங்கி வந்த பல அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடுகளை வன்னி மூன்றாம் ஈழப் போரில் இருந்து எதிர்கொண்டு வருகின்றது.
இத்தடைகள் சிறுவர்களை அதிகம் பாதித்து வருகின்றது. போசாக்கு குறைவு, சிறார் தொற்று நோய்கள் என்பன அதிகரித்துள்ளன. அதனை போர் நிறுத்த காலத்தில் பயணம் செய்தவர்கள் அவதானித்திருந்தனர்.
ஓவ்வொரு வாரமும் இந்நிலமை மோசமடைந்து வருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு நிறுவனமும், அனைத்துலக சமூகமும் இதனை சிங்கள அரசிடம் எடுத்துச் சென்ற போதும் எந்த பலனும் எற்படவில்லை.
வன்னியின் மக்கள் தொகை 460,000 ஆகும். இதில் கிளிநொச்சியில் 200,000 பேரும், முல்லைத்தீவில் 200,000 பேரும், வவுனியாவில் 30,000 பேரும், மன்னாரில் 30,000 பேரும் வசிக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது