யாழ்ப்பாணம் தென்மாராச்சியின் வரணி மற்றும் குடமியன் முகாம்களில் உள்ள ஸ்ரீலங்காப்படையினர் இன்று காலை 7 மணியளவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து வயதுப்பிரிவுகளையும் கொண்ட சுமார் 600 பேரை கட்டாய பணிகளில் ஈடுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் இராணுவ முகாம்களின் வெளிப்புறங்கள் மற்றும் 5 கிலோ மீற்றர் தொலைவைக்கொண்ட கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் இதன் சுற்றுப்புற காணிகள் என்பவற்றை துப்புரவு செய்யுமாறு இந்த 600 பொதுமக்களும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்டாய பணிகள் மாலை வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வரணியில் உள்ள முல்லி சுட்டிபுரம் பகுதியில் அமைந்திருக்கும் சிறிய முகாம் பகுதிகளையும் துப்புரவுசெய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன்போது கட்டாய பணிகளை கண்காணிப்பதற்காக பெருமளவிலான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்மாராச்சியின் முன்னரங்க காவலரண் பகுதியில் வீதியோரங்களில் இருந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.இந்தநிலையில் அந்த வீடுகள் இராணுவத்தினரால் முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொடிகாமம் பருத்தித்துறை வீதியும் போக்குவரத்துக்காக மூடப்பட்டு முழுமையாக படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்