இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக அல்ல; ஜனநாயகத்தை மீளநிலைநிறுத்துவதற்காகவே அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவிகளை நாடுகின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.
கல்கிஸை மவுண்ட் லவேனியா ஹோட்டலில் நேற்று ஆரம்பமான தெற்காசியாவில் பன்முகத்தன்மை தொடர்பான இருநாள் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியாவைச்சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவிகளை இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவா பயன்படுத்துகின்றது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கின்றது என்கின்ற விடயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அதேநேரத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக ஜனநாயக நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அதனைத்தான் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று விட்டது. மாகாணசபைகளுக்கான தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதே மாதிரியான செயற்பாட்டை வடக்கிலும் முன்னெடுப்பது எமது நோக்கமாகும்.
சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவது இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக அல்ல; ஜனநாயகத்தையும் ஜனநாயக கட்டமைப்புக்களையும் நாடெங்கிலும் மீள நிலை நாட்டுவதற்காகவேயாகும் என்றார்.