வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் போர் காரணமாக 42 பாடசாலைகள் இடம்பெயர்ந்து இயங்குவதாக வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் தம்பிராசா மேகநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்விவலய கல்வி நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்விவலயத்தில் 89 பாடசாலைகள் உள்ளதாக தெரிவித்த அவர் ,இலங்கையரசின் கட்டுப்பாட்டு பகுதியில் 35 பாடசாலைகள் இயங்குவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்த நிலையில் முன்னரங்க நிலைகளில் உள்ள பாடசாலைகள் கனகராயன்குளம் பகுதிக்கு நகர்த்தப்பட்டு இணைப்பு பாடசாலைகளாக இயங்கிவருகின்றன.
கோயில்குளம்,குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள நான்கு பாடசாலைகள் பாண்டியன்குளம் பகுதியில் இயங்கிவருகின்றன.
பட்டிகுடியிருப்பு மருதஓடை பகுத பாடசாலை மாணவர்கள் படையினரன் எறிகணை வீச்சால் இடம்பெயர்ந்து பல பாடசாலைகளில் கற்றல் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
47 பாடசாலைகள் மட்டுமே உரிய இடத்தில் இயங்குவதாகவும் இவ்வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கல்வி பணிப்பாளர் தம்பிராசா மேகநாதன் தெரிவித்தார்.
யாழ் சென்ற ஆசிரியர்கள் இதுவரை பணிக்கு திரும்பாத காரணத்தினால் கற்றல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மாணவர்களுக்குரிய நூல்களும் இதுவரை முழுமையாக வந்துசேரவில்லையெனவும் தெரிவித்தார்.