குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சீருடையில் அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், தரையில் வீழ்த்திய பின்னர் தங்கள் மீது பலதடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தனது நண்பர் கூறியதாக இச்சம்பவத்தில் படுகாயமடைந்து உயிர்தப்பிய பரராஜசிங்கம் கோகுலராஜ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட அதேவேளை, படுகாயமடைந்து உயிர்தப்பிய பரராஜசிங்கம் கோகுலராஜ், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது சாட்சியம் அளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
நான் கொழும்பில் பிறந்த ஆறுமாத காலத்தின் பின்னர் எமது குடும்பத்தினருடன் திருகோண மலையில் குடியேறினோம்.
எனது தந்தை கணேசபிள்ளை பரராஜசிங்கம். இலங்கை கடற்படையில் மின்னிணைப்பாளராக பணிபுரிந்தார்.
நான் எனது கல்வியை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் பயின்றேன்.
ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளுடனும் எதுவிதமான தொடர்புகளையும் நான் கொண்டிருக்கவில்லை.
அதேநேரம், அரசுடனோ விடுதலைப்புலிகளுடனோ எந்தவிதமான முரண்பாடுகளையும் நான் கொண்டிருக்கவும் இல்லை.
எனது குடும்பத்தவரும் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படாத அதேவேளை, ஒருபோதும் விடுதலைப் புலிகளுக்கோ அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளுக்கோ ஆதரவாகவும் இருந்ததில்லை.
தான் பொலிஸின் எந்தவிதமான குற்றங்களுக்கும் தண்டிக்கப்பட்டவனும் இல்லை.
1995 இல் எனது தாயார் நோயினால் இறந்ததனைத் தொடர்ந்து நாம் சாதாரண வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தோம்.
திருகோணமலையில் இராணுவம் பிரசன்னமாகி இருந்த வேளை, தமிழ் இளைஞர்கள் வெளியில் திரிவது அபாயகரமானதாகவே இருந்ததால் நான் வீட்டைவிட்டுச் செல்வது மிகக்குறைவு.
ஆனால், நான் தரம் ஒன்றிலிருந்து என்னுடன் கல்விகற்ற மாணவர்கள் சிலரை நண்பர்களாகக் கொண்டிருந்தேன்.
எனது உயர்கல்வி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மோட்டார்வாகன தொழில்நுட்பக் கற்கைநெறியைத் தொடர்வதற்காக கொழும்பு சென்று விட்டேன்.
கொழும்பிலிருந்து விடுமுறை ஒன்றின்போது நான் திருகோணமலை வந்திருந்தபோதே இச்சம்பவம் இடம் பெற்றது.
சம்பவதினத்தன்று நானும் எனது நண்பர்களும் ஹேமச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு காந்தி சிலையடிக்குச் சென்று கதைத்துக் கொண்டிருந்தோம்.
அவ்வேளை அங்கு குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்ததுடன், வழமைபோலவே நிலைமையும் இருந்தது.
நாம் அங்கு முப்பது நிமிடங்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தபோது, நான் எனது நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளை, பச்சை நிறமுடைய ஆட்டோ ஒன்று வந்து எம்மீது குண்டொன்றை வீசிவிட்டுச் சென்றது.
குண்டு வெடிப்பினால் எனது தலையில் பாரதூரமான காயமொன்று ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த நான், இரண்டு மணித்தியாலத்ங்களின் பின்னர் சுயநினைவிற்கு வந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் எனக்கருகில் இச்சம்பவத்தில் காயமடைந்த யோகராஜா பூங்குழலனுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதையும் உணர்ந்தேன்.
மேலும், எனது உடலிலிருந்து நாலரை லீற்றர் இரத்தம் வெளியேறி இருப்பதாகவும் கைக்குண்டுத்தாக்குதலினால் நான் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து சில நிமிட இடைவெளியின் பின்னர் நான் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாகவும் எனது உடலிலிருந்து 7 -8 ரவைகளை எடுத்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் இச்சூட்டுச் சம்பவம் பற்றி துறைமுகப் பொலிஸார் என்னிடம் எதுவிதமான கேள்விகளும் கேட்கவில்லை.
இச்சம்பவத்தில் காயமடைந்த எனது நண்பன் கூறினார்,
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சீருடையில் வந்த விசேட அதிரடிப்படையினர் அவர்களைத் தாக்கியதாகவும் தரையில் விழுத்திய பின்னர் தங்கள் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கூறினார்.
இத்துப்பாக்கித் சூட்டுச் சம்பவத்திலேயே எனது ஐந்து நண்பர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் அரசாங்கமோ அவர்களை விடுதலைப்புலிகளுடன் இணைந்து குண்டுத்தாக்குதல் ஒன்றிற்கு முயற்சித்தபோதே இறந்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால், அரசின் கருத்துக்கு முற்றிலும் மாறுபாடான வகையில் அந்த ஐந்து இளைஞர்களும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினாலேயே இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.